Tuesday, September 22, 2009

குளியல் சோப் சைவமா? அசைவமா?

காலையில் எழுந்து குளித்து ஊதுபத்தி ஏற்றி சுலோகங்கள் கூறி சாமி கும்பிட்டாச்சு. இன்னைக்கு அமாவாசை அதனால் நான் சுத்த சைவம். அசைவம் சாப்பிட மாட்டேன். இந்த டயலாக் கேட்காத வீடு இருக்காது. (நான் கூறுவது அசைவப் பிரியர்களின் வீடுகளில்)
ஆனால் காலையில் எழுந்ததும் குளித்தோமே? சோப் போட்டுதான்.

அந்த சோப்பில் என்ன கலந்திருக்கிறது என்று யோசித்ததுண்டா?

என்ன கலந்திருக்க போகிறது வாசனை திரவியமும் சில கெமிக்கலும் தான் என்று கூறிவிடலாம்.

ஆனால் அதில் அதிக அளவில் கலந்திருக்கும் மிருகக் கொழுப்பு பற்றி நிறையப் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில சோப்புகளில் மிருகக் கொழுப்பிற்கு பதிலாக காய்கறி எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காய்கறி எண்ணெய்யை விட மிருக கொழுப்பு மிகவும் மலிவாக கிடைக்கிறது. இதனால் சோப் தயாரிப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. எனவே பெரும்பாலானா சோப்புகளில் மிருக கொழுப்பே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில சோப்புகளின் கவரில் இது காய்கறி எண்ணெய்யில் தயாரிக்கப்பட்டது என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அதை எவ்வளவு நிச்சயமாக நாம் நம்புவது.

இதனுடைய அளவு சோப்பின் கவரில் TFM (Total Fatty Matter) எத்தனை சதவீதம் என்று அச்சிடப்பட்டிருக்கும். இதனுடைய அளவு 70 சதவீதத்தை தாண்டியிருந்தால் நல்ல சோப் என்று கருதுகிறார்கள்.

ஆனால் மிருக கொழுப்பா? அல்லது காய்கறி எண்ணெய்யில் தயாரித்ததா? என்பது பற்றியான தகவல்கள் பெரும்பாலான சோப்புகளின் கவர்களில் இல்லை.

Monday, September 21, 2009

திரு. A.K. வேங்கட சுப்ரமணியன்

திரு. அ.கி. வேங்கட சுப்ரமணியன் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் 20ந் தேதி ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவலர் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தை உந்துநர் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்திற்கு 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். கூட்டம் ஆரம்பிக்கும் முன் தேநீர் கொடுத்தார்கள்.
கூட்டத்திற்கு திரு. அ.கி.வேங்கட சுப்ரமணியன் அவர்களின் மனைவி வந்திருந்தார். முதலில் அவரது திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் உந்துநர் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கே.வி பற்றி பேசினார்கள். அதன் பின்னர் 30க்கும் மேற்பட்ட மக்கள் மையத்தைச் சார்ந்தவர்கள் பேசினார்கள். இது வரை ஏ.கே.வியைப் பற்றி தெரிந்திராத எனக்கு அவர்களின் பேச்சின் மூலம் அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் எனக்கு ஆச்சரியம் இப்படியும் ஒரு மனிதரால் வாழ முடியுமா? அதுவும் உயர்பதவியில் அமர்ந்து கொண்டு.
நேர்மையானவர், கீழ்தட்டு மக்களுக்காக உழைப்பவர், லஞ்சத்தை எதிர்த்தவர், மனுதாரர்களை மன்னராக உயர்த்த பாடுபட்டவர், பணியில் நேர்மை, நுகர்வோர் விழிப்புணர்வு இப்படி அவரைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.
ஆனால் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் 2 நிமிடங்கள் தான்.
அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் அவரின் பணித்திறனை பற்றியும் பணி நேர்மை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர்.

<

கூட்டத்தில் ஏ.கே.வி அவர்கள் எழுதிய மக்களாகிய நாம், கட்சி ஆட்சி மீட்சி ஆகிய புத்தகங்கள் கிழக்கு் பதிப்பகத்தாரால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவர் எழுதிய மன்னரா? மனுதாரரா? மற்றும் தட்டிக் கேட்க தகவல்கள் ஆகிய புத்தகங்கள் விரைவில் மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகத்தாரால் கொண்டுவரப்படுகிறது என்ற அறிவிப்பும் அங்கே இருந்தது.

கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அனைவரும் ஏ.கே.வி அவர்களின் கொள்கையை உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர். அவரது ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலிச் செலுத்தினார்கள்.
A.K.V the Great Man.

தமிழினி மாத இதழ்

தமிழினி பதிப்பகத்தாரின் மாத இதழ் கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழினி என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதற்கு பரவலான விளம்பரம் இல்லையென்றாலும் பரவலான வாசகர்கள் இருக்கிறார்கள்.
அதில் பல தரப்பட்ட தளங்களில் எழுதும் எழுத்தாளர்கள் எழுதிவருகிறார்கள்.
குறிப்பாக சமூகம், அரசியல், இயற்கை பற்றி குமரி மைந்தன்.
திணையவியல் குறித்து பாமயன்.
சிற்பவியல் குறித்து செந்தீ நடராசன்.
NGOகளின் செயல்பாடுகள் குறித்து செல்வ புவியரசன்.
இலக்கியம் குறித்து நாஞ்சில் நாடன், ஜெயமோகன், மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், ராஜ் கௌதமன், ஆ.பழனி.
தமிழர் மெய்யியல் குறித்து ஆர்.குப்புசாமி.
பல தளங்களில் எஸ்.ராமச்சந்திரன், இராம கி, பாதசாரி, கரு.ஆறுமுகத் தமிழன், பழ. கருப்பையா மற்றும் பலர் எழுதி வருகிறார்கள்.
இந்த இதழின் சிறப்பே இத்தனை தளங்களில் கட்டுரைகளை தாங்கி வருவது தான்.
மேலும் அட்டைப்படங்களில் வருகின்றன சிற்பங்கள் தமிழக கலைச் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டுவனவாக இருக்கின்றன.
தமிழ் ஆர்வலர்கள் விரும்பிப் படிக்கும் வண்ணம் உள்ளது.
இன்னும் கொஞ்சம் எளிமையான தமிழில் இருந்தால் அனைவரும் படித்து புரிந்து கொள்ள இயலும் என்பது எனது கருத்து.
தமிழின் சிறப்பையும் தமிழக கலைகளையும் முன்னிறுத்துகிறது.
தமிழினி இதழின் வலைதளம் www.tamizhini.com.
ஆண்டு சந்தா ரூ. 240

தொடர்புக்கு

+91 9884196552
tamizhininool@yahoo.co.in
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600014


சென்னை புத்தகக் கண்காட்சி 2010

சென்னை புத்தகக் கண்காட்சி இந்த வருடம் டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பித்து சனவரி முதல் வாரத்தில் முடிவடைகிறது.
வருடா வருடம் சென்னையில் சனவரி மாதத்தில் திருவிழா போல் நடைபெற்று வருகிறது தென்னிந்தியா பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி. இதில் 400க்கும் அதிகமான கடைகள் இடம் பெறும்.
வழக்கமாக சனவரி மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து பொங்கல் விடுமுறையையொட்டியை முடிவடைந்து விடும்.
ஆனால் இந்த வருடம் அப்புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
பலரும் இதை வரவேற்கிறார்கள். பலர் இதை எதிர்க்கிறார்கள். ஆனால் எப்படியும் இந்த வருட புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி வாரத்தில் கண்டிப்பாக ஆரம்பித்துவிடும் என்கிறார்கள்.
இதன் மூலம் எட்டுவருடங்களாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் இருந்த நான் இந்த வருடம் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறேன். எப்படியும் இந்த வருடப் பொங்கலை கொண்டாடி விடலாம் என்று.

Thursday, September 17, 2009